ஒரே ஒரு ரன்னில்... சச்சினின் சாதனையை முறியடித்த கோலி.. இவ்வளவு சீக்கிரமாவா?
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.
தொடரில் யார் முன்னிலை பெறுவது என்பதை நிர்ணயிக்கும் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

4வது டெஸ்ட் டாஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஓவல் மைதான பிட்ச்சானது, முதல் 3 நாட்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் எனவும் 4 மற்றும் 5வது நாளில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகும் எனத்தெரிகிறது. எனவே முதலில் பவுலிங் செய்து இந்திய அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட ரூட் திட்டமிட்டுள்ளார்.

சச்சின் சாதனை
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சச்சினின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 522 இனிங்ஸில் விளையாடிய சச்சின் 23 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். இதே போன்று கேப்டன் விராட் கோலி 3வது டெஸ்ட் போட்டி வரை 489 இன்னிங்ஸ்களில் விளையாடி இருந்தார் விராட் கோலி 22999 ரன்களை குவித்திருந்தார்.

புதிய சாதனை
இந்த சூழலில் இன்றைய போட்டியில் அவர் மேலும் ஒரு ரன்னை அடித்ததால் 490 இன்னிங்ஸ்களில் 23000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை தகர்த்துள்ளார். சச்சினின் சாதனையை கோலி முறியடித்ததால், சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் மற்றொருபுறம் அவரின் ஃபார்ம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் விராட் கோலி இந்த தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே அரைசதம் கடந்துள்ள அவர் இந்த 4 ஆவது போட்டியின் மூலம் மீண்டும் பார்மிற்கு திரும்புவார் என்றும் சதம் அடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications