இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்டும் டிரா? 1444 ரன்கள் குவிந்த மைதானத்தில் நடக்கப் போகும் மேட்ச்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்தத் தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி அவசியம் ஆகும்.
மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் அபாரமாகப் போராடி போட்டியை டிரா செய்ததன் மூலம், இந்திய அணி தொடரை இழக்காமல் உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆனால், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்தால் தொடரை இழக்க நேரிடும். அதே சமயம் ஐந்தாவது போட்டி நடைபெற உள்ள ஓவல் மைதானம் சமீப காலமாக பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது என்ற ஒரு தகவலும் வலம் வருகிறது.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியா ஓவல்?
ஓவல் மைதானத்தின் சமீபத்திய வரலாறு, இந்தப் போட்டியின் முடிவு குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. காரணம், இங்கு கடைசியாக நடைபெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு மாபெரும் 'ரன் திருவிழா" நடந்தேறியது.
சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அந்த முதல் தர டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 1444 ரன்கள் குவித்தன. முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி, கிட்டத்தட்ட 162 ஓவர்கள் வரை விளையாடி, 9 விக்கெட் இழப்பிற்கு 820 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி மட்டும் 305 ரன்கள் விளாசி முச்சதம் அடித்தார். மேலும், டான் லாரன்ஸ் (178), வில் ஜேக்ஸ் (114), மற்றும் சாம் கரன் (108) ஆகியோரும் சதமடித்து அசத்தினர். அடுத்து ஆடிய டர்ஹாம் அணி, முதல் இன்னிங்ஸில் 362 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் ஆனது.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். கேப்டன் அலெக்ஸ் லீஸ் மீண்டும் ஒரு சதம் அடிக்க, மற்றொரு தொடக்க வீரரான எமிலியோ கிரே ஆட்டமிழக்காமல் 156 ரன்கள் குவித்தார். ஆட்ட நேர முடிவில், டர்ஹாம் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 262 ரன்கள் எடுத்திருந்தது.
மொத்தமாக, அந்த நான்கு நாள் ஆட்டத்தில் மூன்று இன்னிங்ஸ்களில் மட்டும் 1444 ரன்கள் அடிக்கப்பட்டன. இதில் ஒரு முச்சதம் மற்றும் ஆறு சதங்கள் அடங்கும்.
5வது டெஸ்டின் நிலை என்ன?
ஓவல் ஆடுகளம் இதே போன்று மீண்டும் ஒரு பேட்டிங் சொர்க்கமாக அமைந்தால், இரு அணிகளின் பந்துவீச்சாளர்களுக்கும் அது சிம்மசொப்பனமாக அமையும். ஏற்கனவே நல்ல பார்மில் இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ரன் குவிப்பில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், இந்தப் போட்டியும் நான்காவது போட்டி போல அதிக ஸ்கோருடன் டிராவில் முடிவடையும். அப்படி நடந்தால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை வெல்லும். இதனால், இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications