லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தனது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்டின் கடைசி நாளான இன்று, போட்டியின் முடிவு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம் என்ற நிலையில், ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறியுள்ளது.
இந்த மறக்க முடியாத தொடரின் இறுதிக்கட்டத்தில், நான்கு விதமான முடிவுகளுக்கும் வாய்ப்பு இருப்பதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம். வெற்றி, தோல்வி, டிரா அல்லது டை என எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி?

ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம், மேகமூட்டமான வானிலை மற்றும் ஈரமான மைதானத்துடன் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி தனது வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ளது. மறுபுறம், இந்திய அணி இந்தத் தொடரை 2-2 என சமன் செய்ய வெறும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதும்.
தற்போதைய போட்டி சூழ்நிலையைப் பார்க்கும்போது, இங்கிலாந்தின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய அணியும் வெற்றி பெற சிறிதளவு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டால் போட்டி டிராவில் முடியலாம். ஏன், இந்தத் தொடர் முழுவதும் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கியதால், ஒரு 'டை' கூட ஏற்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இரண்டு அணிகளும் சரி சமமாக 387 ரன்கள் எடுத்ததை போல இப்போது ஐந்தாவது போட்டி டையிலும் முடியலாம்.
நேற்றைய ஆட்டத்தில், 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்துக்கு ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்தபோது, போட்டியின் முடிவு இங்கிலாந்துக்குச் சாதகமாகவே இருக்கும் என அனைவரும் கருதினர்.
ஆனால், இந்தத் தொடர் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆக்ரோஷமாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, ஜேக்கப் பெத்தேல் மற்றும் சதமடித்து நிலைத்து நின்ற ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
உடனடியாக, இந்திய வீரர்களுக்குப் புத்துயிர் கிடைத்தது. முகமது சிராஜ் ஆவேசத்துடன் பந்துவீச, மைதானத்தில் இந்திய ரசிகர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்திய அணி, திடீரென வெற்றிப் பாதைக்குத் திரும்பியதை போன்ற தோற்றம் ஏற்பட்டது. சிராஜ் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன், தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
சிராஜும் பிரசித் கிருஷ்ணாவும் சோர்வடைந்திருந்தாலும், தங்களது கடைசி சக்தி வரை போராடி, இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். அவர்களின் இந்த ஓயாத உழைப்புதான், ஐந்தாவது நாள் வரை போட்டியை கொண்டு சென்றுள்ளது.
இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி பிட்ச் மீது "ஹெவி ரோலரைப்" பயன்படுத்தி ஆடுகளத்தை பேட்டிங்கிற்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்கும். ஆனால், இரவு முழுவதும் ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சியுடன் களம் காணும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், தங்களது கடைசி முயற்சியாகப் போராடுவார்கள். இன்னும் 3.4 ஓவர்களில் புதிய பந்து எடுக்கப்படவுள்ளதும், மேகமூட்டமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதும் இந்திய பந்துவீச்சுக்குச் சாதகமாக அமையலாம்.
இந்தத் தொடர் முழுவதும் இதுதான் நடந்து வருகிறது. ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றும் போதெல்லாம், மற்றொரு அணி மிக மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுத்துள்ளது. எனவே, என்ன நடக்கும் என பார்க்கலாம்.