சர்ஃபராஸ் கான் வச்ச ஆப்பு.. டக் அவுட்டான வீரரை கழட்டி விட முடிவு.. உள்ளே வரும் சீனியர் வீரர்
ராஜ்கோட் : சர்ஃபராஸ் கான் அறிமுகம் ஆன முதல் போட்டியின் முடிவிலேயே சக வீரர் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்பட காரணமாகி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். அதன் காரணமாக அணியில் அவரது இடத்தை உறுதி செய்து இருக்கிறார்.
அதே சமயம், சர்ஃபராஸ் கானுக்கு முன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரஜத் படிதார் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு பெற்றும் தன்னை நிரூபிக்கவில்லை. அடுத்து நடக்க உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் அணிக்கு திரும்ப இருக்கிறார். எனவே, சர்ஃபராஸ் கான் அல்லது ரஜத் படிதார் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே வாய்ப்பு பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ரஜத் படிதார் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் மொத்தமே 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் தன் கடைசி இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி இருந்தார். மூன்றாவது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா என அனைத்து வீரர்களும் அரைசதம், சதம் என ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் ரஜத் படிதார் மொத்தமே 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். சர்ஃபராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களில் 62 மற்றும் 68* ரன்கள் குவித்தார்.
எனவே, சர்ஃபராஸ் கானை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தக்க வைக்க முடிவு செய்துள்ள இந்திய அணி, ரஜத் படிதாரை நீக்க உள்ளது. அதன் மூலம் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே எல் ராகுல் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மீண்டும் பேட்டிங் வாய்ப்பு பெற இருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலையில் உள்ளது, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும்.


Click it and Unblock the Notifications