
ஓவல் டெஸ்ட்
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் தோல்வி பாதையை நோக்கியே இருந்தது. ஏனென்றால் ஆட்டத்தின் முதல் நாள் அன்றே இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 290 ரன்கள் அடித்து முன்னிலை பெற, 2வது இன்னிங்ஸில் இந்தியா சூப்பர் கம்பேக் கொடுத்தது. ரோகித் சர்மாவின் சதம், புஜாரா, பண்ட், ஷர்துல் ஆகியோரின் அரைசதம் என இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 368 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 210 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியடைந்தது.

அபார வெற்றி
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் தான் முதலில் இருந்தது. முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. ஆனால் விடாப்பிடியாக இருந்த இந்திய அணி பவுலர்கள் சொல்லி வைத்து ஒவ்வொரு விக்கெட்டாக தூக்கினர். இதனால் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவின் டெஸ்ட் வெற்றி சாத்தியமானது.

விராட் கோலி புகழாரம்
இந்த வரலாற்று வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி, இந்த போட்டியில் சிறந்த விஷயம் என்னவென்றால், அது இந்திய வீரர்கள் காட்டிய ஆர்வம் தான். நாங்கள் இந்த தொடரில் தாக்குப்பிடித்தால் போதும் என நினைத்து ஆடவில்லை. வெற்றி பெறுவதற்காகவே இங்கு வந்தோம். அதனை மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொடுத்த வீரர்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.

டாப் 3 பவுலிங்
இந்திய அணியின் பவுலிங் அற்புதமாக இருந்தது. கடைசி ஒரு நாளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டனர். நான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த 8 ஆண்டுகளில் நான் பார்த்த டாப் 3 பவுலிங்கில் இதுவும் ஒன்று எனக் கூறுவேன். அவ்வளவு சிறப்பாக இருந்தது.

அஸ்வின் விவகாரம்
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் பிட்ச் சாதகமாக இருக்கும், அஸ்வினை சேர்க்காதது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த கோலி, இது 'ஃப்ளாட் பிட்ச்', இங்கு நல்ல வெயில் மற்றும் வறண்ட பிட்ச் இருந்தது. ஜடேஜாவுக்கு பவுலிங் வாய்ப்பு கொடுத்தால் விக்கெட் கிடைக்கும் என்பதை அறிவோம். ஆனால் அதேவேளையில் பிட்ச்-ல் ரிவெர்ஸ் ஸ்விங் நன்றாக ஆனது. எனவே அதன் மூலம் 10 விக்கெட்டுகளையும் எடுத்துவிடலாம் என முடிவெடுத்தோம். அதனை முடித்தும் காட்டினோம் எனக்கூறினார்.


Click it and Unblock the Notifications











