சோர்ந்து போன துருவ் ஜுரேல்.. மரியாதை அளித்த சக இந்திய வீரர்கள்.. நெகிழ வைக்கும் சம்பவம்
ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்தார் துருவ் ஜுரேல். எனினும், சதம் அடிக்கும் வாய்ப்பை 10 ரன்களில் நழுவ விட்டார்.
அதனால், அவர் சோர்ந்து போன நிலையில் இருந்த அவரை நெகிழ வைக்கும் வகையில் சக இந்திய வீரர்கள் அவருக்கு மரியாதை அளித்து உற்சாகம் செய்தனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்தது. ஆனால், அடுத்து ஆடிய இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. 200 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகத்தில் இருந்த போது துருவ் ஜுரேல் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். குல்தீப் யாதவ் நீண்ட நேரம் களத்தில் நின்று அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
அதை பயன்படுத்திக் கொண்ட துருவ் ஜுரேல் அரைசதம் கடந்தார். பின்னர் 9 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் 90 ரன்களை எட்டினார் துருவ் ஜுரேல். இன்னும் 10 ரன்கள் எடுத்தால் தன் முதல் டெஸ்ட் சதம் அடிக்கலாம் என கனவுடன் இருந்த அவர் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆன நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட சோகத்துடன் ஆடுகளத்தை விட்டு இந்திய வீரர்கள் அறையை நோக்கி நடந்தார் துருவ். இந்திய அணியின் இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்தது துருவ் தான். இதனை அடுத்து அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட போதும் சதம் அடித்த வீரருக்கு தரும் மரியாதையைப் போல அவருக்கும் கொடுத்தனர் சக இந்திய வீரர்கள்.
வீரர்கள் அறைக்கு வெளியே வந்து நின்றபடி கைதட்டி அவருக்கு உற்சாகம் அளித்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாகம் அளித்தனர். இதை அடுத்து மகிழ்ச்சியுடன் சென்றார் துருவ் ஜுரேல். இந்த சம்பவம் நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தன் இரண்டாம் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது இங்கிலாந்து அணி. இது எட்டக்கூடிய இலக்கு என்பதால் இந்திய அணி இந்தப் போட்டியில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications