ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் விலகினார் அஸ்வின். தனது தாய்க்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக பங்கேற்ற அஸ்வின், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே அவரது 500வது டெஸ்ட் போட்டி விக்கெட் ஆகும். அந்த மைல்கல் சாதனையை செய்த சில மணி நேரங்களில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. பின்னர் அஸ்வினின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியானது.
அதனால், இந்த டெஸ்ட் போட்டியில் இனி அஸ்வின் பங்கேற்க மாட்டார் என எண்ணிய நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் குண்டை தூக்கி வீசி இருக்கிறார். அது மட்டுமின்றி, ஒரு வீரர் டெஸ்ட் போட்டியின் இடையே வெளியே சென்று விட்டு, மீண்டும் ஆடுகளத்துக்கு வந்தால் குறிப்பிட்ட நேரம் வரை பந்து வீச காத்திருக்க வேண்டும். அதை "பெனால்டி டைம்" என்பார்கள்.

ஒரு வீரர் எத்தனை நிமிடங்கள் வெளியே இருக்கிறாரோ, ஆடுகளத்துக்கு திரும்பிய பின் அத்தனை நிமிடங்கள் வரை பந்து வீசாமல் காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஒரு வீரர் 90 நிமிடத்துக்கும் அதிகமாக வெளியே இருக்க நேரிட்டால் அவர் ஆடுகளத்துக்கு திரும்பிய பின் அதிகபட்சம் 90 நிமிடம் வரை பந்து வீச முடியாது.
அஸ்வின் விவகாரத்தில் இந்த பெனால்டி டைம் விதி கடைபிடிக்கப்படாது எனவும் தினேஷ் கார்த்திக் கூறி இருக்கிறார். அஸ்வின் தனது தாயை பார்க்க போட்டி நடக்கும் ராஜ்கோட் நகரத்தை விட்டே சென்றுள்ள நிலையில் அவரது சூழ்நிலை கருதி அவருக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மூன்றாவது டெஸ்ட்டில் அஸ்வின் இல்லாத நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 319 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது அஸ்வின் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.