லக்னோ : இந்திய அணி முகமது ஷமியை இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறக்கவில்லை என்றால் அது அணிக்கு பெரிய பாதகமாக மாறும் என முன்னாள் வீரர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவும் இல்லாத நிலையில், நியூசிலாந்து போட்டியைப் போலவே முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் ஆட வேண்டும் என கூறி உள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றாலும் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் நான்கு போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் சராசரிக்கும் கீழ் மோசமாக பந்து வீசி வந்த ஷர்துல் தாக்குருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
ஷர்துல் தாக்குர் பேட்டிங் ஆடும் திறன் கொண்டவர். அவர் எட்டாம் வரிசையில் தேவை ஏற்பட்டால் பேட்டிங் செய்து அணியை காப்பாற்றுவார் என காரணம் கூறப்பட்டது. ஷமியிடம் பெரிதாக பேட்டிங் திறன் இல்லை என்றாலும் பந்துவீச்சில், தாக்குரை விட பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவர். ஆனாலும், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
அதன்பின் பாண்டியா காயம் அடைந்ததால் அவருக்கு இணையாக யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. பாண்டியா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரின் பேட்டிங்கை ஈடுகட்ட சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். சூர்யகுமார் யாதவை சேர்த்து விட்டதால் பாண்டியாவின் பந்துவீச்சை ஈடுகட்ட வேறு வீரரை சேர்க்கவும் முடியாது. அதே சமயம், வேகப் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்ற நிலையில், ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, ஷமி அணியில் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்து போட்டியில் களமிறங்கிய ஷமி ஐந்து விக்கெட் வீழ்த்தி அந்தப் போட்டியில் இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நடைபெற உள்ள லக்னோ ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் மூன்று ஸ்பின்னர்களை அணியில் சேர்க்க வேண்டும்.
அதனால், சிராஜ், பும்ரா, ஷமி ஆகிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரை நீக்கியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படியான சூழலில் ஷமியை நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக மாறும். சிராஜ் கடந்த போட்டிகளில் அதிக பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கிறார். பெரிய அளவில் விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை.
அதனால், ஷமியை நீக்கி தவறு செய்யாமல், அதற்கு பதிலாக சிராஜை நீக்கலாம் என முன்னாள் வீரர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். ரோஹித் சர்மா சரியான முடிவை எடுப்பாரா?