இப்படி ஒரு வீரர் இந்திய அணிக்கு தேவையே இல்லை.. ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு.. கொந்தளித்த ரசிகர்கள்
லக்னோ : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தவறான ஷாட் ஆடி தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஏற்கனவே, பல முறை அவர் இதே தவறை செய்து விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். அனைத்து அணிகளுக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனம் அத்துப்படியாக இருக்கிறது.

இங்கிலாந்து அணியும் அவரது பலவீனத்தை சரியாக பயன்படுத்தி அவர் விக்கெட்டை சாய்த்தது. இதைக் கண்ட ரசிகர்கள் அவரை அணியை விட்டே நீக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.
லக்னோவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுப்மன் கில் 9 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள்.
இக்கட்டான நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதுவரை உலகக்கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் எந்த ஒரு போட்டியிலும் அணியின் வெற்றிக்கு காரணமாக ஒரு இன்னிங்க்சை ஆடவில்லை.
அதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலாவது அவர் இக்கட்டான நேரத்தில் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் 16 பந்துகளை வீணடித்து வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் கேட்ச் கொடுத்த விதம் தான் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் எப்போதும் ஷார்ட் பந்துகளில் புல் ஷாட் (pull shot) அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறி வருகிறார். இந்தப் போட்டியிலும் ஷார்ட் பந்தாக இல்லை என்றாலும் சற்று பவுன்ஸ் ஆகி வந்த பந்தை புல் ஷாட் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடைய பலவீனம் ஷார்ட் பந்துகள் தான் என்பதை அனைத்து அணிகளும் தெரிந்து வைத்திருப்பதால் அதை வைத்தே அவரை வீழ்த்தி வருகின்றனர். அவர் அதை சரி செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளாக அதே தவறை செய்து வருகிறார். எனவே,. இப்படி அணிக்கு உதவாத வீரரை அணியை விட்டே நீக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications