லக்னோ : இங்கிலாந்து அணிக்கு சவால் விடுக்கும் வகையில் இந்திய அணி வியூகம் வகுத்துள்ளது.
இங்கிலாந்து அணி அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணி என்பதால் இந்திய அணி பந்துவீச்சில் அதற்கு ஏற்ற திட்டத்தை வகுத்துள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் லக்னோ பிட்ச்சுக்கு ஏற்ப இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் இங்கிலாந்து அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பரிதாப நிலையில் இருக்கிறது.

ஆனால், அதற்காக இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், அணியாக சேர்ந்து செயல்படாமல், பேட்டிங் திட்டம் இல்லாமலேயே அந்த அணி கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
தற்போது தன் தவறில் இருந்து திருந்தி, இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து முழு மூச்சுடன் செயல்படும். அந்த அணியின் பலம் பேட்டிங் என்பதால் அதை வைத்தே இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தம். இதை முன்கூட்டியே கணித்து கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி இந்திய அணித் தேர்வை செய்துள்ளது.
லக்னோ ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் என மூன்று ஸ்பின்னர்கள் களமிறங்க உள்ளனர். வேகப் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த பும்ரா, முகமது ஷமி இடம் பெறுவார்கள். அஸ்வினை சேர்க்க வேண்டும் என்பதால் முகமது சிராஜ் நீக்கப்படுவார்.
ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தாலும், இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பகுதி நேரமாக பந்து வீச அதிக வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி நிச்சயம் இந்த ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்தே இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும். அதற்கு முக்கிய காரணம், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி என நால்வருமே அதிக அனுபவம் கொண்ட துல்லியமான பந்துவீச்சாளர்கள். குல்தீப் யாதவ் ஓவர்களை இங்கிலாந்து அணி குறி வைக்கும் என்றாலும் அவர் விக்கெட் வீழ்த்துவதில் நிபுணர் என்பதால் இந்த திட்டம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.