ராஞ்சி : இந்திய அணி வீரர்களை கையாளும் போக்கு மோசமாகிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக டெஸ்ட் அணியில் திடீரென அனுபவ வீரர்களே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான் காரணம்.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது அவர் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனாலும், அவர் புதிய வீரர்களை கண்டறிந்து அணியை பலப்படுத்த தவறவில்லை. உதாரணத்துக்கு சுப்மன் கில், பும்ரா, முகமது சிராஜ், கே எல் ராகுல், குல்தீப் யாதவ் என தற்போது இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருப்பவர்களை கண்டறிந்து வாய்ப்பு அளித்து வளர்த்தது விராட் கோலி தான்.

விராட் கோலி சென்ற பின் கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே அணித் தேர்வில் ஈடுபட்டு வந்தது. ஆனால், அதற்காக நன்றாக ஆடும் வீரர்களை எல்லாம் அணியில் இருந்து நீக்கி விட்டு, பேட்டிங் செய்யவே திணறும் வீரர்களை அணியில் வைத்துக் கொண்டு இருக்கிறது.
டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக ஆடி வரும் புஜாரா, அஜின்க்யா ரஹானே ஆகியோரை நீக்கி விட்டு, அணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இளம் வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்த இந்திய அணி நிர்வாகம் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் அணியை இன்னும் மோசமான நிலைக்கே கொண்டு சென்று இருக்கிறது. அந்த இருவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகிய இருவரை அணியில் தேர்வு செய்தனர்.
ஆனால், அவர்கள் இருவருக்கும் பல வாய்ப்புகள் அளிக்கப்பட்ட பின்னரும் நிலையாக ரன் குவிக்கவில்லை. அதனால், ஒரேடியாக இந்திய அணி மோசமான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக மாறி விட்டது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அணியின் ஒரே அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் விராட் கோலியும் இல்லாத நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களை நம்பியே இருக்கிறது இந்திய அணி.
சுப்மன் கில் இந்த் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே ரன் குவித்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக ஆடியதை அடுத்து பாதி தொடரில் நீக்கப்பட்டு இருக்கிறார். அவரை டெஸ்ட் தொடரில் தேர்வு செய்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலேயே படுமோசமாக ஆடி இருந்தார். அவருக்கு ஷார்ட் பால்களில் ரன் குவிப்பது பெரிய சவாலாக இருக்கிறது. பேட்டிங்கில் டெக்னிக்கல் பிரச்சனை இருக்கும் ஒரு வீரரை வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் சமாளிப்பது மிகவும் கடினம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் மீது ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் வைத்த நம்பிக்கை வீணாகிப் போய் இருக்கிறது.
ஏற்கனவே, விராட் கோலி விலகி உள்ள நிலையில் கே எல் ராகுல் காயம் காரணமாக நீக்கப்படவே இந்திய அணியில் அனுபவ பேட்ஸ்மேன்களே இல்லை. அப்படி என்றால் அணியில் அனுபவ வீரர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும், இந்தியாவின் ரஞ்சி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். ஆனால், அவரை மறந்தும் கூட அணியில் எடுக்கக் கூடாது என்ற முடிவில் ரஜத் படிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இருவரை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். இது தான் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் செய்த தவறு.
ஏற்கனவே, அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானேவை ஒரே நேரத்தில் அணியில் இருந்து நீக்கியதால் தான் அவர்கள் இடத்தை உடனே நிரப்ப முடியாமல் உள்ளது. தற்போது மீண்டும் இரண்டு புதிய வீரர்களுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனி ஆளாக நின்று சதம் அடித்து அந்த அணியை முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் எடுக்க காரணமாக இருந்தார். அதற்கு இணையாக பேட்டிங் செய்ய இந்திய அணியில் விராட் கோலி இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாத பட்சத்தில் புஜாரா இருந்திருக்க வேண்டும்.
பேட்டிங்கில் இப்படி தவறு நடந்தாலும் பந்துவீச்சில் பெரிய குறை ஒன்றும் இல்லை என சொல்லி விட முடியாது. இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நான்காவது டெஸ்ட்டில் வம்படியாக ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும் என்ற நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் ஓய்வு பெரிய தவறாக மாறி உள்ளது. நான்காவது டெஸ்ட்டில் முகமது சிராஜால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
பும்ராவிற்கு ஐந்தாவது போட்டியின் போது ஓய்வு அளித்து இருக்கலாம். அல்லது தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் போது ஓய்வு அளித்து விட்டு கடைசி மூன்று போட்டிகளில் ஆடுமாறு கூறி இருக்கலாம். இந்த சொதப்பலுக்கு முக்கிய காரணம் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர். அது மட்டுமின்றி பும்ரா மற்றும் முகமது ஷமி டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்றால் இந்திய அணியின் பந்துவீச்சு கேள்விக் குறியாக மாறி விடும் நிலையில் தான் இருக்கிறது. வேறு எந்த முழு நேர வேகப் பந்துவீச்சாளரையும் இந்திய அணி இன்னும் கண்டறியவில்லை என்பதும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் தோல்வி தான்.