விக்கெட் கிடைக்காத வெறி.. இங்கிலாந்து வீரரை தள்ளிய பும்ரா.. பதறிய ரோஹித்.. என்ன நடந்தது?
ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விரக்தியில் இருந்த இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா, சதம் அடித்து ஆடி வந்த இங்கிலாந்து வீரர் ஆலி போப்பை பார்க்காமல் இருப்பது போல நின்று நெட்டித் தள்ளினார்.
அதனால் ஆலி போப் அதிருப்தி அடைந்து அவரிடம் அது குறித்து கேட்டதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கேப்டன் ரோஹித் சர்மா ஓடி வந்து ஆலி போப்பை சமாதானம் செய்தார். ஆலி போப் விக்கெட்டை வீழ்த்த முடியாத வெறியில் தான் பும்ரா இப்படி நடந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் குவித்தன. இந்தியா முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்க்ஸில் 250 ரன்களுக்குள் சுருட்டி எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது.
ஆனால், நிலைமை வேறாக இருந்தது. இங்கிலாந்து அணியின் ஆலி போப் இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சை உடைத்தார். அவர் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் மூலம் ரன் குவிக்கத் துவங்கினார். இதை அடுத்து அவர் சதம் கடந்து இரட்டை சதத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 400 ரன்களை தாண்டியது.
இந்திய மண்ணில் இரண்டாம் இன்னிங்க்ஸில் 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்வது என்பது கடினமான காரியம் ஆகும். அதனால், இந்திய வீரர்கள் ஆலி போப் ஆட்டத்தால் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக பும்ரா பல ஓவர்கள் பந்து வீசியும் ஆலி போப் விக்கெட்டை வீழ்த்த முடியாத கடுப்பில் இருந்தார். இந்த நிலையில், ஆலி போப் ரன் ஓடி வந்த போது அதை பார்க்காத மாதிரி குறுக்கே நின்று அவரை இடித்துத் தள்ளினார்.
அதை எதிர்த்து ஆலி போப் அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பும்ரா தான் பார்க்கவே இல்லை. தெரியாமல் நடந்து விட்டது எனக் கூறினார். பிரச்சனை பெரிதாகும் முன் குறுக்கிட்ட கேப்டன் ரோஹித் சர்மா ஆலி போப்பை சமாதானம் செய்தார். இதை அடுத்து ஆலி போப் அமைதியானார். பும்ரா செய்தது தேவையற்ற செயல் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.


Click it and Unblock the Notifications