ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஏற்கனவே விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் விலகி இருக்கும் நிலையில் தற்போது பும்ராவை பிசிசிஐ தாமாக முன்வந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. ஒட்டுமொத்த இங்கிலாந்து தொடரில் இருந்தும் விராட் கோலி விலகி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிய கே எல் ராகுல் காயம் காரணமாக அதன் பின் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதும் சந்தேகம் தான்.

இதனிடையே மோசமான ஃபார்ம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், மற்றொரு முக்கிய வீரரான வேகப் பந்துவீச்சாளர் பும்ராவை பிசிசிஐ தாமாக நீக்க உள்ளது இந்திய அணிக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. ஏன் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது?
பும்ரா கடந்த டிசம்பர் மாத இறுதி முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார். தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அவர் அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி இருக்கிறார். அடுத்து அவர் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார். அதன் பின் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார்.
எனவே, இடைவிடாது பல மாதங்கள் கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்கு பும்ரா தள்ளப்படுவார். அதனால் அவருக்கு காயம் ஏற்படலாம், 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போகலாம். எனவே, இந்த விஷயத்தை கவனமாக கையாள முடிவு செய்துள்ளது பிசிசிஐ. தற்போது டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
பும்ரா நான்காவது போட்டியில் இல்லாத நிலையில், இந்தியா அந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும். அது மட்டும் நடந்தால் பும்ரா ஐந்தாவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால், அப்போது ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா பங்கேற்க வாய்ப்பு உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத நிலையில், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் வேகப் பந்துவீச்சாளர்களாக பங்கேற்பார்கள்.