மும்பை : இந்திய அணி சொந்த மண்ணில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனைத்து போட்டிகளையும் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. அதனால், இந்திய அணி கடும் அழுத்தத்தை சந்தித்து இருக்கும் நிலையில், மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஆந்திரா கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கி வரும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது போட்டியும் அதே அமைப்பின் கீழ் இயங்கும் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த மைதானத்தில் உட்புற கிரிக்கெட் பயிற்சி அமைப்புக்கான கட்டுமானப்பணிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆந்திரா கிரிக்கெட் அமைப்பு.

ரோஜர் பின்னி இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் அன்று விசாகப்பட்டினம் வர இருக்கிறார். அதே நாளில் ஜெய் ஷாவும் வரக் கூடும், ஆனால் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. அவர் அங்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் நிச்சயம் இந்திய வீரர்களுக்கு அது கடும் அழுத்தத்தை கொடுக்கும். அதற்கு காரணம், சமீபத்தில் இந்திய அணி முக்கிய தொடர்களில் எல்லாம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது தான். அது ஒரு வகையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முதலில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால் அது நாட்டை ஆளும் பாஜகவின் வெற்றியாக ஒரு பிரிவினரால் கொண்டாடப்பட்டு இருக்கும். அது வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கை கொடுத்து இருக்கும். ஆனால், இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
அதைத் தொடர்ந்து முக்கியமான தொடரான தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் 1 - 1 என சமன் செய்த இந்திய அணி, அடுத்து இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. அரசியல் ரீதியாகவும் இந்திய அணி வெற்றிகரமான அணியாக இருப்பது முக்கியம் என்பதால் இந்திய வீரர்களுக்கு அந்த வகையிலும் அழுத்தம் உள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியைக் காண ஜெய் ஷா நேரில் வருகிறார் என்பதால் அது சரியாக ஆடாத இந்திய வீரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.