IND vs ENG : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனை.. ஜோ ரூட் மைல்கல் ரெக்கார்டு
ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் பிரம்மாண்ட டெஸ்ட் சாதனை படைத்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2019இல் நடந்து வரும் நிலையில் அதில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற இரண்டு ஆண்டுகள் நடக்கும் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019 முதல் நடத்தி வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் வரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுள் ஒருவரான ஜோ ரூட் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 60 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது அவர் 48 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4016 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 50.20 ஆகும். இதில் 12 சதம், 16 அரைசதம் அடங்கும்.
இதைத் தவிர இந்திய அணியுடன் மோதும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு சாதனைகளை படைத்து ஜாம்பவான்கள் சாதனையை உடைத்து இருக்கிறார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் போட்டிகளில் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2535 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அவரை தற்போது ஜோ ரூட் முந்தி இருக்கிறார். ஜோ ரூட் தற்போது இந்தியாவுக்கு எதிராக 2555 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் சுனில் கவாஸ்கர் 2438 ரன்களுடனும், நான்காவது இடத்தில் அலஸ்டர் குக் 2431 ரன்களுடனும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் விராட் கோலி 1991 ரன்களுடன் இடம் பெற்றுள்ளார்.
அதே போல இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்குடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார் ஜோ ரூட். இருவரும் 2555 ரன்கள் சேர்த்து உள்ளனர். முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜோ ரூட் ஏமாற்றம் அளித்த போதும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் குவித்தார். அந்த அணி முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications