ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தான் அவுட்டான விதம் குறித்து அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு எழுந்தது.
அஸ்வின் பந்துவீச்சில் அவர் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்த நிலையில் ரீப்ளேவில் பந்து நேராக வந்ததாக காட்டப்பட்டதை சுட்டிக் காட்டி சக வீரர்களிடம் பேசினார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் இது ஏமாற்று வேலை என்கிற தொனியில் ட்வீட் வெளியிட்டு பின் அதை நீக்கினார். என்ன நடந்தது?

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் பின்தங்கியது. அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. முதல் ஓவரில் இருந்தே அஸ்வின் பந்து வீசி பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட் நிதான ஆட்டம் ஆடி வந்தார்.
அப்போது அஸ்வின் பந்துவீச்சில் பந்து அவரது காலில் பட்டது. அம்பயர் அவுட் தர மறுத்த நிலையில், இந்தியா ரிவ்யூ கேட்டது. அப்போது திரையில் காட்டப்பட்ட போது பந்து ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆவதாக காட்டப்பட்டது. மேலும், லைனில் சரியாக பிட்ச் ஆன பந்து ஸ்டம்ப்பை தகர்ப்பதாக ரீப்ளே காட்டப்பட்டது. ஆனால், பந்து லெக் திசையில் பிட்ச் ஆனதாக கருதினார் ஜோ ரூட்.
லைனில் பிட்ச் ஆகாமல் லெக் திசையில் பிட்ச் ஆகி இருந்தால் அது அவுட் என கருதப்படாது. ஆனால், உண்மையில் அந்த பந்து பாதி அளவு லைனில் பிட்ச் ஆகி இருந்தது. அப்படி இருந்தால் கூட அது லெக் திசையில் சென்றதாக கருதப்படாது. அந்த வகையில் இந்திய அணி நியாயமாகவே அந்த விக்கெட்டை பெற்றது.
எனினும், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்து விட்டதால் வெளியேறிய ஜோ ரூட் சக வீரர்களிடம் மைதானத்தில் அந்த ரீப்ளே மீண்டும் திரையிடப்பட்ட போது அதை சுட்டிக் காட்டி தன் அது அவுட்டே இல்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதே சமயம், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், பாதி பந்து லைனுக்கு வெளியே இருந்தது என்றும், ஜோ ரூட் முக்கியமான வீரர் என்ற நிலையில் அவருக்கு மீண்டும், மீண்டும் ரீப்ளே பார்க்கப்படவில்லை உடனடியாக அவுட் கொடுத்து விட்டார்கள் என மைக்கேல் வாகன் ட்வீட் பதிவிட்டு பின் அதை நீக்கினார்.