ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸில் தவிக்கும் என ஒரு நாள் முன்பே கணித்து கூறினார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். அதே போல இந்திய அணி தவித்து தோல்வியும் அடைந்தது.
ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இந்தியா 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. அப்போது மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது காலையில் கெவின் பீட்டர்சன் இந்தப் போட்டியின் முடிவு குறித்து தன் கணிப்பை வெளியிட்டார்.

அதில் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை சிறப்பாக ஆடினால், நாளை இந்திய அணி 7 விக்கெட் இழந்து 50 ரன்கள் எடுக்க முடியாமல் திணறும் என கூறி இருந்தார். அது உண்மையாக மாறி இருக்கிறது. அதாவது இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆலி போப் சிறப்பாக ஆடி 196 ரன்கள் குவித்தார்.
இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. இந்திய மண்ணில் கடைசி இன்னிங்க்ஸில் 231 ரன்களை சேஸிங் செய்வது கடினமான காரியம். இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 15, ரோஹித் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சுப்மன் கில் டக் அவுட் ஆனார். அடுத்து அக்சர் பட்டேல், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி 119 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. கெவின் பீட்டர்சன் சொன்னதை விட மோசமாக வெற்றிக்கு 112 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா 7 விக்கெட் இழந்து தவித்தது. அதன் பின் பின்வரிசை வீரர்களும் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பீட்டர்சன் எப்படி சரியாக இதை கணித்தார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.