ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தான் நல்ல பெயர் எடுக்க வேண்டி செய்த செயலால் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பாரத், துணை கேப்டன் பும்ராவை சீண்டி இருக்கிறார். அதனால், விக்கெட் எடுக்கும் வாய்ப்பை இழந்த பும்ரா, கோபமடைந்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதும் இரண்டாவது இன்னிங்க்ஸில் அபார ஆட்டம் ஆடி இந்திய அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்ற போதும் இரண்டாவது இன்னிங்க்ஸில் பந்துவீச்சில் திணறியது.
இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில் 17வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபுள்யூ வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் காலில் பந்து பட்டது. பும்ரா அது அவுட் என கத்தினார். அம்பயர் அவுட் தர மறுக்கவே அவர் கேப்டன் ரோஹித் சர்மாவை பார்த்து ரிவ்யூ கேட்குமாறு கூறினார்.

அதே சமயம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பாரத், ரோஹித் சர்மாவிடம் ஓடி வந்து ரிவ்யூ கேட்க வேண்டாம் எனக் கூறினார். ரோஹித் சர்மாவும் ரிவ்யூ கேட்க வேண்டாம் என முடிவு செய்தார். அதனால் பும்ரா ஏமாற்றம் அடைந்தார். அதன் பின் மைதானத்தின் பெரிய திரையில் ரீப்ளே காட்டப்பட்ட போது பந்து ஸ்டம்ப்பில் படுவது தெரிந்தது, ரிவ்யூ கேட்டு இருந்தால் நிச்சயம் அது அவுட் என முடிவு கிடைத்திருக்கும். அதைப் பார்த்த பும்ரா கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
கேப்டனிடம் நல்ல பெயர் வாங்க அவசரகதியில் ரிவ்யூ கேட்க வேண்டாம் என கேப்டன் கேட்கும் முன்பே கூறிய பாரத், தன் தவறான முடிவால் பும்ராவை சீண்டிவிட்டார். அவர் சந்தேகமாக இருக்கிறது என ரோஹித் சர்மாவிடம் கூறி இருந்தால் கூட பும்ரா இத்தனை கோபத்தை காட்டி இருக்க மாட்டார்.
அதற்கு அடுத்த ஓவரில் அதே பென் டக்கெட் விக்கெட்டை பவுல்டு அவுட் முறையில் வீழ்த்திய பும்ரா அப்போது மிக ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார். அவர் கிரிக்கெட் வாழ்வில் இத்தனை ஆக்ரோஷமாக அவர் எந்த விக்கெட்டையும் கொண்டாடியதில்லை என கூறும் அளவுக்கு இருந்தது அது. முந்தைய ஓவரில் பாரத் அவரை விக்கெட் எடுக்க விடாமல் தடுத்தது தான் அதற்கு காரணம்.