விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிம்பத்தை உடைக்கும் வேலையை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் செய்து வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் ரோஹித் சர்மாவை குறி வைத்து அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலியை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்துள்ளார். விராட் கோலி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருக்காது என அவர் கூறி இருப்பதும் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற போதும், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் கோட்டை விட்டது. அதனால், 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குறிப்பாக அந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் திட்டம் படுமோசமாக இருந்ததாக கூறினார் மைக்கேல் வாகன்.
இங்கிலாந்து அணியின் விக்கெட்களை வீழ்த்த அருகருகே ஃபீல்டர்களை நிறுத்தாமல், பவுண்டரி எல்லைக்கு அருகே ஃபீல்டர்களை நிறுத்தி ரன்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது மோசமான கேப்டன்சி என அவர் கூறினார். மேலும், விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்காது எனவும் ரோஹித் சர்மாவை குத்திக் காட்டினார் மைக்கேல் வாகன்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு அதிக அழுத்தம் கொடுக்கவே ரோஹித் சர்மாவை குறி வைத்து மைக்கேல் வாகன் பேசி இருப்பதாக கருதப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அப்போது ரோஹித் சர்மாவைப் போன்ற கேப்டன் உலகிலேயே இல்லை என மைக்கேல் வாகன் கூறுவார் என ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.