மருத்துவமனையில் முகமது ஷமி.. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு.. விரைவில் மீண்டு வர வாழ்த்து
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது குறித்த புகைப்படத்தை முகமது ஷமி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் விரைவில் மீண்டு வர வேண்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் முகமது ஷமி. இத்தனைக்கும் அவர் முதல் நான்கு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரது சிறப்பான செயல்பாட்டால் இந்திய அணி அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அதன் பின் அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு காலில் காயம் இருந்ததால் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இனி அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு "அக்கீலீஸ் டெண்டன்" எனப்படும் கால் பாதத்தில் உள்ள பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இனி அவர் அதில் இருந்து மீண்டு வர வேண்டும்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விரைவாக மீண்டு வர வாழ்த்து கூறி இருக்கிறார். பிரதமர் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், "நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன், முகமது ஷமி! உங்களுக்கு மிகவும் தேவையான தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்." எனக் கூறி இருக்கிறார்.
முகமது ஷமி தனது காயத்தால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்தார். அடுத்து 2024 ஐபிஎல் தொடர் மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்குள் முகமது ஷமி உடற்தகுதி பெற்று மைதானத்துக்கு திரும்புவது சந்தேகம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications