மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிகமுறை 5 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.

2வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடர்ந்தது. 400 ரன்களில் அந்த அணி ஆல்-அவுட்டானது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் பென் ஸ்டோக்கை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தபோது அவர் 5வது விக்கெட்டை எட்டினார். இதன் மூலம் கபில்தேவ் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 23 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தவர் கபில்தேவ். தற்போது அதை அஸ்வினும் சாதித்து காட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 35 முறை கும்ப்ளேவும், ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் அதை எளிதில் கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.