மறுபடியும் இப்படி நடந்தா வீட்டுக்கு தான்.. இந்திய வீரரை எச்சரித்த அணி நிர்வாகம்.. என்ன நடந்தது?
தரம்சாலா : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய ரஜத் படிதார் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் தப்பி இருக்கிறார்.
அது மட்டுமின்றி, அவரை வெளியே அமர வைத்து விட்டு தேவ்தத் படிக்கலை டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வந்தது. ஆனால், அதிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ரஜத் படிதாருக்கு கடைசி வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். எனினும், இதுவே கடைசி வாய்ப்பு என அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரஜத் படிதாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் ஆடிய அவர் 32, 9, 5, 0, 17 மற்றும் 0 ஆகிய ரன்களே எடுத்தார்.
இரண்டு முறை டக் அவுட் ஆனதுடன் ஒரு முறை மட்டுமே 20 ரன்களை தாண்டி இருந்தார். இதை அடுத்து அவரை அணியில் இருந்தே நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. கே எல் ராகுல் அணிக்கு திரும்பினால் ரஜத் நீக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால், கே எல் ராகுல் காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஜத் படிதார் நீக்கப்பட்டு, தேவ்தத் படிக்கல் அறிமுகம் செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி செய்தால் இனி ரஜத் படிதார் எப்போதும் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போகலாம். எனவே, அவருக்கு கடைசி வாய்ப்பு வழங்க முடிவு செய்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பதை கூறி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications