IND vs ENG : சத்தியமா நல்லா தாங்க ஆடினேன் ஆனா.. அறிமுக போட்டியிலேயே நொந்து போன ரஜத் படிதார்
விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் தன் முதல் போட்டியிலேயே துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அடைந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 32 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. ரோஹித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வந்தார் ரஜத் படிதார்.

சிறந்த டெஸ்ட் பேட்டிங்கை ஆடினார் அவர். பந்துகளை சரியாக தடுத்து ஆடினார். அது குறித்து முன்னாள் வீரர்கள் வர்ணனையில் பாராட்டிய நிலையில், அவர் ரெஹான் அஹ்மத் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ரெஹான் வீசிய பந்தை தடுக்க முடிவு செய்த ரஜத், ஒரு காலை முன்னே வைத்து பந்து கிரீஸை அடையும் முன்பே பேட்டால் தடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தடுத்த பின் பந்து இரண்டு முறை பிட்ச் ஆகி ஸ்டம்ப்பை தகர்த்தது.
அதனால், ரஜத் படிதார் பெரும் ஏமாற்றம் அடைந்தார். பேட்டிங்கில் எந்த தவறும் செய்யாமல் தன் அறிமுக டெஸ்ட்டில் அரைசதமாவது அடித்து விட வேண்டும் என ஆடிய அவருக்கு இது போன்ற ஒரு விக்கெட் இழப்பு ஏமாற்றத்தை அளித்தது. ரஜத் படிதார் ஆட்டமிழந்த பின் சரியான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை என்பதால் அக்சர் பட்டேல் 27, ஸ்ரீகர் பாரத் 17 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரஜத் மற்றும் பிற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காத போதும் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 179 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 5, ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications