மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தும் அதில் மொத்தமாக சொதப்பிய ரஜத் படிதார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டது. கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பினால், ரஜத் படிதார் வாய்ப்பை இழப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது.
கே எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகி இருந்தார். அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை என்பதால் அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நீக்கி இருக்கிறது பிசிசிஐ. இதை அடுத்து ரஜத் படிதார் தன்னை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சர்பராஸ் கானின் அதிரடி அறிமுகத்துக்கு பின், தானும் அவருக்கு இணையான வீரர்தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ரஜத் படிதார்

இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் வாய்ப்பு பெற்ற ரஜத் படிதார் 32, 9, 5 மற்றும் 0 ரன்களே எடுத்து இருக்கிறார். அதிலும் அவர் டக் அவுட் ஆன விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதே சமயம், மூன்றாவது டெஸ்ட்டில் அறிமுகமான சர்பராஸ் கான் முதல் போட்டியிலேயே இரண்டு அரைசதம் அடித்து இருக்கிறார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலுக்கு பதிலாக ரஜத் படிதார் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார். அப்போது குறைந்தது ஒரு அரைசதமாவது அடித்தால் மட்டுமே எதிர்காலத்தில் அவருக்கு டெஸ்ட் போட்டி அணியில் வாய்ப்பு கிடைக்கும். ரஜத் படிதார் அரைசதம் அடித்தால் கூட அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற நிலையே தற்போது உள்ளது. எனவே, அவர் சதம், இரட்டை சதம் என பெரிதாக சாதித்தால் மட்டுமே சர்பராஸ் கானுக்கு இணையான வீரராக பார்க்கப்படுவார்.