IND vs ENG : அஸ்வின் செய்த தவறு.. முறைத்துப் பார்த்த ஜடேஜா.. பார்ட் டைம் ஃபீல்டரால் வந்த வினை
ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி ரன் குவிப்பால் இரண்டாவது இன்னிங்க்ஸில் ரன் வேட்டை நடத்திய நிலையில், அஸ்வின் செய்த தவறால் ஒரு பவுண்டரி கூடுதலாக அந்த அணிக்கு கிடைத்தது.
ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அஸ்வின் ஃபீல்டிங்கில் சொதப்பிய நிலையில் ஜடேஜாவின் முகம் அப்போது இறுக்கமாக மாறியது. அவர் தன் கோபத்தை வெளிக்காட்டவில்லை என்றாலும் அவர் கோபத்தில் இருந்தார். இந்த தவறு நடக்க பகுதி நேரமாக ஃபீல்டிங் செய்ய வந்த ரஜத் படிதாரும் ஒரு முக்கிய காரணம்.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜடேஜா வீசிய 50வது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஜடேஜா ரன் ஏதும் கொடுக்கவில்லை. ஐந்தாவது பந்தை ஆலி போப் ஸ்வீப் செய்தார். பந்து பவுண்டரி கோட்டை நோக்கி ஓடிய நிலையில் பந்தை பிடிக்க மிட் ஆன் திசையில் நின்று இருந்த அஸ்வின் விரைந்தார்.
அதே சமயம் மிட் விக்கெட் திசையில் நின்று இருந்த ரஜத் படிதாரும் பந்தை பிடிக்க ஓடி வந்தார். அப்போது அஸ்வின் வேகத்தை குறைந்து ரஜத் பந்தை பிடிப்பார் என நினைத்து விட்டு விட்டார். அதே போல, ரஜத் படிதாரும் அஸ்வினுக்கு அருகே பந்து இருந்ததால் அவர் பிடிப்பார் என வேகத்தை குறைத்தார். இறுதியில் இருவருமே பந்தை பிடிக்கவில்லை. அதனால், ஜடேஜா இருவரையும் முறைத்துப் பார்த்தபடி நின்றார்.
ஜடேஜாவின் கோபத்துக்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமே காரணம் இல்லை. 44வது ஓவரின் போது அஸ்வின் பந்தை பிடிக்க சென்றபோது சறுக்கிக் கொண்டே சென்று பந்தை பிடிக்க முயன்றார். ஆனால், அவரால் பந்தை பிடிக்க முயவில்லை. அவருடைய முயற்சி வீணாகிப் போனது. இரண்டு முறை தன் ஓவரில் அஸ்வின் பவுண்டரி சென்ற பந்தை பிடிக்காமல் கோட்டை விட்டதால் அவர் முறைத்துப் பார்த்தார். மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications