விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் அஸ்வின் பேட்டிங் செய்து முடித்து விட்டு செல்லும் போது, களத்தில் இருந்த அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்வின் என்ன பேசினார்? என பலரும் சமூக வலைதளங்களில் விவாதம் செய்தனர். என்ன தான் நடந்தது?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து முதல் நாளின் கடைசி ஓவர் களத்தில் நின்றார். அவர் 179 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 35 ரன்களை தாண்டவில்லை.

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் 90 ஓவர்கள் வீசப்படும். சில சமயம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட வேகமாக ஓவர்கள் வீசப்பட்டு இருந்தால் கூடுதலாக சில ஓவர்கள் வீச அம்பயர் அனுமதி அளிப்பார்கள். அது போல இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் கூடுதலாக 3 ஓவர்கள் சேர்த்து 93 ஓவர்கள் வீசிய இங்கிலாந்து அணி. எப்போதும் பந்து வீசும் அணி ஒரு நாளின் கடைசி ஓவர்களில் எப்படியாவது அதிக விக்கெட் வீழ்த்தி பேட்டிங் செய்யும் அணிக்கு அடுத்த நாள் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும் என நினைக்கும். எனவே, அந்த கூடுதல் ஓவர்கள் விக்கெட் எடுக்க பயன்படும் முக்கிய அம்சம் ஆகும். பந்துவீசும் அணிக்கு சாதகமான ஒரு விஷயம் ஆகும்.
அது ஒரு புறமிருக்க ஜெய்ஸ்வால் 89வது ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த போது அவர் கையில் லேசான வலி ஏற்பட்டது. அதனால் அவர் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்கள் என்பதால் ஜெய்ஸ்வால் வேண்டுமென்றே கூடுதல் ஓவர்கள் போய்விடக் கூடாது என தாமதம் செய்கிறார் என நினைத்த அம்பயர் அந்த ஓவரின் கடைசி பந்தை சந்தித்த பின் ஓவர் இடைவேளையின் போது மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம் என கூறி விட்டார்.
அதனால், அதிருப்தி அடைந்த ஜெய்ஸ்வால் 89வது ஓவரின் கடைசி பந்தை குறி பார்த்து சிக்ஸ் அடித்தார். அது சிக்ஸ் அடிக்கக் கூடிய வகையில் வீசப்படவில்லை. ஆனாலும், தன் கோபத்தை காட்ட ஜெய்ஸ்வால் அவ்வாறு செய்தார். அதன் பின் ஜெய்ஸ்வால் மருத்துவ உதவியை பெற்றார். அடுத்து அம்பயர் இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக மூன்று ஓவர்களையும் அளித்தார்.
91வது ஓவரில் ஸ்ரீகர் பாரத் விக்கெட் வீழ்ந்தது. ஆக, அந்த கூடுதல் ஓவர்கள் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது. அதன் பின் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். அவர் 93வது ஓவர் வரை விக்கெட் விழாமல் சமாளித்து ஆடினார். அதன் பின் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது அம்பயரிடம் அஸ்வின் கடுமையாக ஏதோ ஒன்றை கூறினார். அவர்கள் இருவரும் ஜெய்ஸ்வால் மருத்துவ உதவி பெற்ற விவகாரம் மற்றும் கூடுதல் ஓவர்கள் குறித்து பேசி இருக்கலாம் என தெரிகிறது. அந்த பேச்சில் அஸ்வின் காரசாரமாக பேசினார். ஆனால், அம்பயர் பம்மிப் பதுங்கியபடியே தான் பேசி சமாளித்தார்.