ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சில ஓவர்கள் கேப்டனாக செயல்பட்டார் அஸ்வின். இந்திய அணியின் பந்துவீச்சின் போது கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தை விட்டு சில ஓவர்கள் சென்றதை அடுத்து அஸ்வின் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
அணியின் மூத்த வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட வேண்டும் என முன்பே குரல்கள் எழுந்த நிலையில் இந்தப் போட்டியில் அது நடந்துள்ளது. அறிவிக்கப்படாத துணை கேப்டனாக அஸ்வின் செயல்பட்டு இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்களுக்கு இடை இடையே ஓய்வு அளிக்க வேண்டும் என்பதில் தேர்வுக் குழு பிடிவாதமாக இருந்து வருகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாத நிலையில் அஸ்வின் துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இரண்டு ஓவர்கள் மட்டுமே அஸ்வின் கேப்டனாக செயல்பட்டார். அந்த ஓவர்களில் எந்த முக்கிய சம்பவமும் நடக்கவில்லை. அதன் பின் ரோஹித் சர்மா மீண்டும் களத்துக்கு வந்து கேப்டன் பணியை தொடர்ந்தார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் 25 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. எப்படியும் 200 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி வீழ்ந்து விடும் என எண்ணிய நிலையில், ஜோ ரூட் போட்டியை தன் கைவசம் எடுத்துக் கொண்டார்.
மிக நிதான ஆட்ட ஆடிய ஜோ ரூட், தான் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை சதம் அடித்து மீண்டும் நிரூபித்தார். இந்த தொடரில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அவர் அதிரடி ஆட்டம் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார் என்ற விமர்சனம் இருந்தது. நிதான ஆட்டம் ஆடி சதம் அடித்து அதை எல்லாம் முறியடித்தார் அவர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்து இருந்தது.