விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதை அடுத்து அவர் தன் கடைசி நாட்களில் இருக்கிறார். விரைவில் டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் முதல் 4 விக்கெட் வீழ்ச்சியில், மூன்று விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் தன் திறமையை மீண்டும் நிரூபித்தார். அது மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார். இந்தியா இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது,

இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் அஸ்வின் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் நான்காம் நாள் காலையில் துவக்கத்தில் இருந்தே பந்து வீசத் துவங்கிய அஸ்வின் ஆலி போப் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார். அதன் பின் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
முன்னதாக பிஎஸ் சந்திரசேகர் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே அதிகமாக இருந்தது. அவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 1979இல் ஆடி இருந்தார். 45 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத அந்த சாதனையை அஸ்வின் முறியடித்து இருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், 97 விக்கெட்களுடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.
இந்த சாதனை மூலம், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு எதிராக பேசியவர்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 399 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது, உணவு இடைவேளையின் போது 194 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்விக்கு அருகாமையில் இருந்தது இங்கிலாந்து. பின்னர் பும்ரா சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்கள் வீழ்த்திய அஸ்வின் இன்னும் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தால் 500 டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல் சாதனையை படைத்து இருப்பார். ஆனால், அந்த வாய்ப்பை இழந்தார்.