IND vs ENG : வெற்றி மிதப்பில் அஸ்வின் செய்த செயல்.. கோபத்தில் கொந்தளித்த இங்கிலாந்து வீரர்
விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு மிக அருகே இந்திய அணி வந்த போது மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை சீண்டினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டனர். என்ன நடந்தது?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்ததால் எப்படியாவது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு ஆடியது. அதனால், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர்களை நோக்கி இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக சைகை செய்தபடி இருந்தனர். பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் என பலரும் இங்கிலாந்து வீரர்களை சீண்டினர்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்களும், இங்கிலாந்து 255 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 253 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடி அந்த இலக்கை எட்ட திட்டமிட்டது. ஆனால், இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 194 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.
அதில் ஆறாவது விக்கெட்டாக பேர்ஸ்டோ பும்ரா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அம்பயர் அவுட் கொடுத்த போதும் அவர் ரிவ்யூ செய்தார். ஆனால், இந்திய வீரர்கள் அது நிச்சயம் அவுட் தான் என விக்கெட்டை கொண்டாடினர். அப்போது அஸ்வின் வேண்டுமென்றே பேர்ஸ்டோ முன் சென்று கைகளை மடக்கி விக்கெட் வீழ்ந்ததாக கொண்டாடினார். அப்போது ரிவ்யூவுக்கான முடிவு வெளியாகி இருக்கவில்லை.
அதனால், கோபம் அடைந்த பேர்ஸ்டோ, அஸ்வினை நோக்கி திரும்பி கோபமாக பேசினார். அதற்கு அஸ்வினும் பதிலுக்கு பதில் பேசினார். அதனால், களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேர்ஸ்டோ அவுட் என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications