தரம்சாலா : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா இடது கை சுழற் பந்துவீச்சாளர்களில் உலகிலேயே மூன்றாவது இடம் பிடிக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த ஆல் - ரவுண்டராக இருக்கிறார். நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான ஐசிசி ஆல் - ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சை பொறுத்தவரை இதுவரை 292 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் 8 விக்கெட்கள் வீழ்த்தினால் 300 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டுவார். அதன் மூலம் 300 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் முதல் இடது கை ஸ்பின்னர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தினால் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய இடது கை ஸ்பின்னர்களில் உலகிலேயே மூன்றாவது இடத்தை பிடிப்பார். தற்போது மூன்றாவது இடத்தில் 297 விக்கெட்கள் வீழ்த்தி டெரிக் அண்டர்வுட் இடம் பெற்று இருக்கிறார். ஜடேஜா இன்னும் 6 விக்கெட்கள் வீழ்த்தினால் அவரை முந்தி மூன்றாவது இடம் பிடிப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியல் :
ரங்கனா ஹெராத் (இலங்கை) - 433 விக்கெட்டுகள்
டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) - 362 விக்கெட்டுகள்
டெரெக் அண்டர்வுட் (இங்கிலாந்து) - 297 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - 292 விக்கெட்டுகள்
பிஷன் சிங் பேடி (இந்தியா) - 266 விக்கெட்டுகள்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி 17 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். எனவே, அவர் ஐந்தாவது டெஸ்ட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.