ஹைதரபாத் : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறுகளால் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்க்ஸில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. எங்கே தவறு நடந்தது?
முதலில் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய போதே அவருக்கு இணையான அனுபவம் கொண்ட வீரரான புஜாராவை அணியில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், தனது வீண் பிடிவாதத்தால் புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் எடுக்கவே மாட்டேன் என அடம் பிடித்து ரஜத் படிதார் என்ற வீரரை உத்தேச அணியில் சேர்த்தார்.அவர் எப்படியும் கோலி இல்லாமல் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை மிடில் ஆர்டரில் ஆட வைத்து சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் ரோஹித் அப்படி செய்தார்.

அதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என்ற இரண்டு சராசரி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றனர். இவர்கள் இருவருமே கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரன் குவிக்கவே திணறினர். அதே போல, இந்த டெஸ்ட் போட்டியிலும் இருவரும் திணறினர். சுப்மன் கில் 23, 0 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 35, 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அணித் தேர்வில் சொதப்பிய ரோஹித் சர்மா, அடுத்து கேப்டன்சியில் தொடர் சொதப்பல்களில் ஈடுபட்டார். முதல் இன்னிங்க்ஸில் முகமது சிராஜை சரியாக பயன்படுத்தவில்லை. ஸ்பின்னர்களுக்கு தான் விக்கெட் என முடிவு செய்த அவர் சிராஜை இடையே பயன்படுத்தவே இல்லை. அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சேர்ந்து 8 விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது.
அடுத்து இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணியை விரைவாக ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என திட்டம் போடாமல் தடுப்பாட்டம் ஆடும் வகையில் ஃபீல்டிங் அமைத்தார். அதனால் இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். மாறாக அட்டாக்கிங் ஃபீல்டிங் அமைத்து இருந்தால் ரன் போனாலும் விக்கெட்கள் வேகமாக சரிந்து இருக்கும். இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய போது இங்கிலாந்து அணி அட்டாக்கிங் ஃபீல்டிங் அமைத்து தான் போட்டியில் வென்றது.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங் அமைப்பதில் சொதப்பியதால் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து வெற்றியும் பெற்றது.