IND vs ENG : எதிர்காலமே நீங்க தான்.. இந்திய அணிக்குள் குட்டி ஷமியை அழைத்து வந்த ரோஹித் சர்மா
விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு முகேஷ் குமார் சேர்க்கப்பட்டு இருக்கும் பின்னணியில் பெரிய எதிர்கால திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இல்லாத நிலையில், அவரது இடத்தை நிரப்பவே முகேஷ் குமார் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய மண்ணில் நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. ஷமி இல்லாத நிலையில் மற்றொரு அனுபவ பந்துவீச்சாளரான பும்ரா முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்றார். கூடுதல் பந்துவீச்சாளராக முகமது சிராஜ் முதல் போட்டியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அந்தப் போட்டியில் சிராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்தார். அவருக்கு குறைவான ஓவர்களே வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சிராஜ் நீக்கப்பட்டார். பும்ரா, ஷமிக்கு அடுத்து தற்போது ஓரளவு சர்வதேச அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான். ஆனால், அவர் இல்லாமலே இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சந்திக்க இந்திய அணி முடிவு செய்யக் காரணம், முகேஷ் குமார் தான்.
முகேஷ் குமாரின் பந்துவீச்சு கிட்டத்தட்ட முகமது ஷமியின் பந்துவீச்சை போன்றே இருக்கிறது. ஷமி நீண்ட கால பயிற்சியின் காரணமாக எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசும் ஆற்றலை பெற்று இருக்கிறார். அந்த அளவுக்கு முகேஷ் குமார் இன்னும் வளரவில்லை என்றாலும், அவரை பட்டை தீட்டினால் எதிர்காலத்தில் அவரும் முகமது ஷமி போலவே மாறுவார் என கேப்டன் ரோஹித் சர்மா நினைக்கிறார். அதனால் தான் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் மட்டுமே செய்ததால் முகேஷ் குமார் எந்த அளவுக்கு இந்திய ஆடுகளங்களில் செயல்படுவார் என்பது தெரியவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அபார ஆட்டம் ஆடி 179 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications