‘திரும்ப வந்துட்டேனு சொல்லு’ இந்திய அணியுடன் இணைந்தார் ரிஷப் பண்ட்.. ஆனால் ஒரு பெரும் சிக்கல்!
துர்ஹாம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட் நேற்று இந்திய அணியினருடன் மீண்டும் இணைந்தார்.
Recommended Video
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் நடக்கிறது.

கொரோனா வைரஸ்
டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு ரிஷப் பண்ட் யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியை நேரில் பார்க்க சென்றிருந்தார். அங்கிருந்து தான் அவருக்கு கொரோனா பரவியிருக்கும் என தெரிகிறது.

இந்திய அணியுடன் சேர்ந்தார்
கடந்த 8ம் தேதியன்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட அவர், லண்டனில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். சிகிச்சையின் போது பண்ட்-க்கு சீரான இடைவெளியில் பல கட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் நெகடிவ் என முடிவு வந்ததையடுத்து இந்திய அணியுடன் சேர அனுமதி வழங்கப்பட்டது. எனவே நேற்று துர்ஹாமில் உள்ள இந்திய அணியினுடன் ரிஷப் பண்ட் முறைப்படி சேர்ந்தார்.

சந்தேகம்
கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலும், ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியுடன் உள்ளாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பண்ட்-தான் விக்கெட் கீப்பரின் இடத்திற்கு முதல் தேர்வாக உள்ளார். எனவே இந்த வாரம் முழுவதும் பண்ட்-க்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டு அவரின் உடல் தகுதி பரிசோதிக்கப்படும் என தெரிகிறது.

சிகிச்சையில் 4 பேர்
ரிஷப் குணமடைந்த போதும், இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா, அபிமன்யு ஈஸ்வரன், அலுவலர் தயானந்த் கிரானி ஆகியோருக்கும் கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இவர்கள் 4 பேரும் இன்னும் லண்டனில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications