IND vs ENG : இந்தியாவின் சிறந்த டெஸ்ட் ஓபனர்.. கவாஸ்கர், சேவாக்கிற்கு இணையான ரோஹித் சர்மா
தரம்சாலா : இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றிலேயே சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த துவக்க வீரர்களாக அறியப்பட்ட சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் பேட்டிங் சராசரியை சமன் செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் போட்டி சதம் அடித்தார் ரோஹித் சர்மா. துவக்க வீரராக இது அவரது 9வது சதம் ஆகும். துவக்க வீரராக 54 இன்னிங்க்ஸ்களில் 2552 ரன்கள் குவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதன் பேட்டிங் சராசரி 50.03 ஆகும்.

துவக்க வீரராக சுனில் கவாஸ்கர் 50.30 பேட்டிங் சராசரியும், வீரேந்தர் சேவாக் 50.04 பேட்டிங் சராசரியும் வைத்துள்ளனர். தற்போது கிடத்தட்ட அவர்களை நெருங்கி இருக்கிறார் இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே முதலில் இடம் பெற்று வந்தார். ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் அவர் துவக்க வீரராக மாறிய பின்னரும், டெஸ்ட் அணியில் அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே தொடர்ந்து பயன்படுத்தி வந்தது இந்திய அணி. கடந்த 2019இல் தான் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக முதன்முறையாக களமிறங்கினார்.
அப்போது முதல் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 9 சதம் அடித்து இருக்கிறார். மேலும், ஐந்தாவது டெஸ்ட்டில் அடித்த சதம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது நான்காவது சதம் ஆகும். 103 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார் ரோஹித் சர்மா.


Click it and Unblock the Notifications