மாபெரும் வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா செய்த செயல்.. நெகிழ்ந்து போன சர்ஃபராஸ் கான், ஜுரேல்
தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை பெற்றுக் கொண்டார். அதன் பின் அவர் செய்த செயல் கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பல அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். ஒரே டெஸ்ட் தொடரில் நான்கு இந்திய வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் என நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நால்வரில் மூன்று போட்டிகளில் ஆடிய சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் தங்கள் செயல்பாடுகளால் 2 போட்டிகளின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான வெற்றிக் கோப்பையை வாங்கிய கேப்டன் ரோஹித் சர்மா அதை சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல்-இடம் அளித்தார்.
அந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதன் பின்பு ஒவ்வொரு இளம் வீரரும் அந்த கோப்பையை ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இளம் வீரர்களின் மதிப்புக்குரிய நபராக கேப்டன் ரோஹித் சர்மா இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் இதை பாராட்டி வருகின்றனர்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான நிலையில் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களும், இந்தியா 477 ரன்களும் குவித்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications