விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, சக இந்திய வீரர்களை மிக மோசமாக திட்டினார். அவர் பேசியது ஸ்டம்ப் மைக் மூலம் நேரலையில் ஒளிபரப்பானது. இதை அடுத்து ரசிகர்கள் சக வீரர்களின் தாயை குறித்து மோசமான வார்த்தையில் ரோஹித் சர்மா பேசியதை கண்டித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா பொதுவாகவே கொச்சையான கெட்ட வார்த்தைகளை எப்போதும் பேசி வருகிறார். கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் எரிச்சல் அடையும் போது கெட்ட வார்த்தையில் பேசுவது உண்டு. ஆனால், கேப்டனாக இருப்பவர் அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அங்கே தான் ரோஹித் சர்மா சறுக்கி வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அது போன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

பல சமயம் அவர் யாரையும் குறிப்பிட்டு கூறாமல் அப்படி பேசுவார். ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ரன் குவித்து வந்த நிலையில், வேகமாக ஓவர்களை வீச வேண்டும் என அவசரப்பட்ட ரோஹித், ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் துவங்கும் முன் ஃபீல்டர்களை விரைவாக தங்கள் இடங்களில் சென்று நிற்குமாறு வலியுறுத்தினார்.
அப்போது சிலர் சில வினாடிகள் தாமதம் செய்ததால் எரிச்சல் அடைந்த ரோஹித், "தோட்டத்தில் நடந்து செல்பவர்கள் (மெதுவாக) யாரையாவது பார்த்தால்....." எனக் கூறி தாயை பழிக்கும் மோசமான சொற்களை கூறினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி, ஒளிபரப்பானது. வட இந்தியாவில் இந்த சொல் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல் என்றாலும் இதை வீட்டில் பயன்படுத்த முடியுமா? இந்த நிலையில் ஒரு கேப்டன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் கிரிக்கெட் போட்டியின் இடையே எந்த பொறுப்பும் இல்லாமல் தன் அணி வீரர்களையே இப்படி திட்டி இருக்கிறார் என சில ரசிகர்கள் ரோஹித் சர்மாவை கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
சிலர் விராட் கோலி கேப்டனாக இருந்த போது எதிரணியை இது போல பேசுவார். அப்போது அது தவறு என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது ரோஹித் சர்மா தன் சக வீரர்களையே இப்படி மோசமாக பேசுவதை என்னவென்று சொல்லப் போகிறார்கள்? என கோலிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.