ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அவருடன் அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சர்ஃபராஸ் கான் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் குவித்தன. முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்க்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் சதம் அடித்து இருந்தார். அதன் பின் முதுகு வலியால் வெளியேறிய அவர் மீண்டும், நான்காம் நாள் களத்துக்கு வந்து இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார்.

ஜெய்ஸ்வால் இரட்டை சதம் எடுக்க ரன் ஓடிய போது அவருக்கு முன்னதாகவே சர்ஃபராஸ் கான் அதைக் கொண்டாடினார். பொதுவாக ஒரு வீரர் சதம் அல்லது இரட்டை சதம் அடித்தால் அவருடன் ஆடும் வீரர் ரன் ஓடி முடித்த பின்னரே அவரை வந்து அணைத்து பாராட்டுவார். சக வீரராக இருந்தாலும் அவரின் இரட்டை சதத்தை கொண்டாடுவது என்பதை அரிதாகவே காண முடியும்.
ஆனால், சர்ஃபராஸ் கான் ஜெய்ஸ்வாலுக்கும் முன்பாகவே அதை கொண்டாடினார். அந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் சிறந்த புகைப்படம் என பலரும் அதை பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். மேலும். இந்திய அணியின் எதிர்காலம் இவர்கள் தான் எனவும் பலரும் கூறி வருகின்றனர். சர்ஃபராஸ் கான் இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார்.
ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சர்ஃபராஸ் கான் 68 ரன்களும் எடுத்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை டிக்ளர் செய்தது. அப்போது ஆடுகளத்தை விட்டு வெளியேறிய போது சர்ஃபராஸ் கான் பின்னே நின்று கொண்டு, ஜெய்ஸ்வாலை முன்னே செல்லுமாறு கூறினார். அதன் மூலம் இரட்டை சதம் அடித்த அவருக்கே பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும் என அவர் அவ்வாறு செய்தார். அதையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 430 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.