மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் சமூக வலைதளத்தில் வாழ்த்து கூறி இருக்கிறார். இந்த நிலையில், இமாம் உல் ஹக் உள்நோக்கத்துடன் இதை செய்து இருக்கிறார் என இந்திய ரசிகர்கள் சிலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதிரடி டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன சர்பராஸ் கான் கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறக் கூடிய வாய்ப்பு உள்ள வீரர் என பேசப்பட்டு வருபவர். ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடரில் அவர் மிகச் சிறந்த பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். ஆனாலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாத நிலையில் சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளூர் போட்டிகள் மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் தன்னை நிரூபித்த சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவரது தேர்வை இந்திய ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு திறமையான வீரருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது என கூறி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் திடீரென சர்பராஸ் கானுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் சர்பராஸ் கானுக்கு வாழ்த்து கூற வேண்டும் என எண்ணிய நிலையில் இருவரும் ஒரே காலகட்டத்தில் அண்டர் 19 அணிகளில் ஆடிய வீரர்கள் என்பதால் அவர் வாழ்த்து கூறி இருக்கிறார் என கூறப்பட்டது.
ஆனால், சில ரசிகர்கள் அதெல்லாம் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அதே சமயத்தில் ஒன்றாக அண்டர் 19 அணியில் ஆடியவர்கள் தான். அவர்கள் அறிமுகம் ஆன போதெல்லாம் வாழ்த்து கூறாத இமாம் உல் ஹக் இப்போது வாழ்த்து கூறுகிறார். ஏன் இதை செய்கிறார் என்றால் சர்பராஸ் கான் இஸ்லாமியர் என்பதால் அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த வீரர் வாழ்த்து கூறினால் இந்திய அணியில் சர்பராஸ் கான் மீது சிலருக்கு வெறுப்பு உண்டாகலாம். அதை செய்யவே இமாம் தேவையில்லாமல் வாழ்த்து கூறி இருக்கிறார் என்கிறார்கள்.
மாபெரும் போராட்டத்துக்கு பின் சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா? என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவரைச் சுற்றி சர்ச்சைகளை கிளப்பி விட்டு இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்.