மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
ஆனால், அடுத்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 14 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இதை அடுத்து அவர் மீது விமர்சனம் எழத் துவங்கி விட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் வரும் டெஸ்ட் தொடர்களின் போது விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி விடுவார்கள் என்பதால் சர்ஃபராஸ் கான் அணியில் தன் இடத்தை உறுதி செய்ய இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

மும்பை அணிக்காக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்த சர்ஃபராஸ் கான், உள்ளூர் அளவில் 69 ரன்கள் பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதன் காரணமாகவே அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். அவர் அறிமுகமான இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமானது என்பதால் தான் சர்ஃபராஸ் கான் எளிதாக இரண்டு அரைசதங்கள் அடித்து விட்டார். ராஞ்சியில் நடந்த ஐந்தாவது போட்டியில் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்த நிலையில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவே திணறினார். 53 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். போட்டி சூழ்நிலை காரணமாக மட்டுமே அவர் அதிக டாட் பால்களை ஆடவில்லை. மாறாக இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி பந்துவீச்சை அவரால் எளிதாக அணுக முடியவில்லை. அவரது பந்துவீச்சில் மட்டும் 34 பந்துகளை சந்தித்து அதில் 30 டாட் பால் ஆடி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். டாம் ஹார்ட்லி பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். ஒரு போட்டியில் சிறப்பாக ஆடியும், பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்சில் மோசமாக தடுமாறி இருக்கும் சர்ஃபராஸ் கான் பெரும் போராட்டத்துக்கு பின் இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அடுத்து விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினாலும் சர்ஃபராஸ் கானுக்கு மாற்று வீரராகவாவது அணியில் இடம் கிடைக்கும்.