லண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அனுபவ வீரர் லியாம் டாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பந்துவீசுகையில் ஷோயப் பஷீரின் விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை. போட்டியின் போது அவர் 5.5 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.

போட்டிக்குப் பிறகு, பஷீரின் காயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது. அதில், ஷோயப் பஷீருக்கு விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக மான்செஸ்டர் மற்றும் லண்டனில் முறையே ஜூலை 23 மற்றும் 31 ஆம் தேதிகளில் தொடங்கவிருக்கும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஷோயப் பஷீருக்கு மாற்று வீரராக 25 வயதான ஆல்-ரவுண்டர் லியாம் டாசன் அழைக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். டாசன், 2016 ஆம் ஆண்டு சென்னையில் இந்திய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இந்தியாவின் கருண் நாயர் முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2016 செப்டம்பரில் தனது ஒருநாள் அறிமுகத்தையும், ஜூலை 2016 இல் இலங்கைக்கு எதிராக டி20 அறிமுகத்தையும் டாசன் பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் டாசன் மாற்று வீரராக இருந்தபோதிலும், தொடர் முழுவதும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
ஜோஃப்ரா ஆர்ச்சர்
கஸ் அட்கின்சன்
ஜேக்கப் பெத்தேல்
ஹாரி புரூக்
பிரைடன் கார்ஸ்
ஜாக் கிராலி
லியாம் டாசன்
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட்
ஜேமி ஸ்மித்
ஜோஷ் டங்
கிறிஸ் வோக்ஸ்