லோக்சபா தேர்தலில் சுப்மன் கில்.. 70 சதவீத வாக்குகளுக்கு குறி.. நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லை
சண்டிகர் : 2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில தேர்தல் களத்தில் சுப்மன் கில்லும் பங்கேற்க இருக்கிறார். உடனே அவர் தேர்தலில் நிற்கப் போகிறாரா? என நினைக்க வேண்டாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வரும் சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே முன்னணி வீரராக மாறி இருக்கிறார். மேலும், இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் அவர் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்து இருக்கிறார்.

நாடு முழுவதும் பிரபலமான வீரராக இருக்கிறார் சுப்மன் கில். இந்த நிலையில், பஞ்சாப் மாநில தேர்தல் அமைப்பு அவரை அந்த மாநிலத்தின் தேர்தல் தூதுவராக பயன்படுத்த உள்ளது. வாக்கு செலுத்துவதன் முக்கியத்துவத்தை இளம் வாக்காளர்களிடம் பரப்புவதே அவரின் முக்கிய பணி என பஞ்சாப் மாநில தேர்தல் அமைப்பு கூறி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர்கள் வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் இந்த முறை 70 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என அந்த மாநில தேர்தல் அமைப்பு திட்டமிட்டு வருவதால், அந்த மாநிலத்தை சேர்ந்த பிரபலங்களை களமிறக்க முடிவு செய்து கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை களமிறக்கி உள்ளது. அத்துடன் பஞ்சாபி பாடகர் டார்செம் ஜாஸ்ஸார் என்பவரையும் தேர்தல் தூதுவராக நியமித்து உள்ளது.
சுப்மன் கில்லுக்கு 24 வயதே ஆகும் நிலையில் இது அவரது இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அதிலேயே தேர்தலுக்கான தூதுவராகி இருக்கிறார் சுப்மன் கில்.


Click it and Unblock the Notifications