சோலியை முடிச்சுட்டான்..தலையில் துண்டைப் போட்ட புஜாரா..கேட்டை இழுத்து சாத்திய பிசிசிஐ.. என்ன நடந்தது?
விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறலாம் என காத்திருந்த டெஸ்ட் மன்னன் புஜாராவுக்கு இனி இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் அவரது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட முடிவு கட்டி இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியில் சுமார் 10 ஆண்டுகள் மூன்றாம் வரிசையில் களமிறங்கி ஆதிக்கம் செலுத்தி வந்தார் புஜாரா. ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரைப் போலவே எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக இருந்தார் புஜாரா. ஆனால், அவரது நிதான ஆட்டத்தை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. மேலும், 2021 முதல் 2022 வரையிலான அவரது பேட்டிங் ஃபார்ம் சராசரியாக இருந்ததால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதில் ஒருநாள் அணியில் துவக்க வீரராக களமிறங்கி வந்த சுப்மன் கில், டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடி அரைசதம், சதம் அடித்த சுப்மன் கில், அதன் பின் தொடர்ந்து குறைந்த ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார்.
தற்போது நடந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் அரைசதம் அடிக்க முடியாமல் திணறிய சுப்மன் கில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இது அவரது மூன்றாவது டெஸ்ட் சதம் ஆகும்.
ஏற்கனவே அவர் இரண்டாவது சதம் அடித்த பின் 13 இன்னிங்ஸ் வரை சதம் அடிக்காமல் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று வந்தார். தற்போது அவர் சதம் அடித்துள்ள நிலையில் இன்னும் ஒரு வருடத்திற்கு அவர் ரன்னே அடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது.
அதனால், சுப்மன் கில் ஃபார்மில் இல்லை, அதனால் புஜாரா வாய்ப்பு பெறுவார் என நேற்று வரை இருந்த பேச்சு இனி காணாமல் போய்விடும். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புஜாராவை அணியில் தேர்வு செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாலும், அதற்கேற்ப சுப்மன் கில் சதமடித்து இருப்பதாலும் இனி புஜாராவுக்கு இந்திய அணியில் வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications