
4வது டெஸ்ட் போட்டி
இங்கிலந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை குவித்தது. இதனையடுத்து 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 127 ரன்களும், கே.எல்.ராகுல் 46 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா 61 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 270 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பயிற்சியாளருக்கு கொரோனா
இந்திய அணி வலுவான நிலையில் இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் 4ம் நாள் ஆட்டத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவாரண்டைனில் 4 பேர்
ஒவ்வொரு போட்டியின் போதும் இந்திய அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்தவகையில் நேற்று மாலை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாஸ்திரி மட்டுமல்லாது, அவருடன் தொடரில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகியோரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னடைவு
இரண்டு முறை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது நேற்று இரவு மற்றும் இன்று காலை செய்யப்பட்ட பரிசோதனைகளில் நெகட்டிவ் என முடிவு வந்த வீரர்கள் மட்டுமே 4வது நாள் டெஸ்ட் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் இன்றி இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











