கேண்டர்பரி: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டி நீக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. தற்போது இந்தியா ஏ அணியில் நிதீஷ் குமார் ரெட்டி விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகக் கருதப்பட்டு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மறுபுறம், வேகப்பந்து வீசக்கூடிய பேட்ஸ்மேனாக ஷர்துல் தாக்கூர், ஆல்ரவுண்டர் என்ற அடையாளத்துடன் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் இந்தியா ஏ அணியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் நிதீஷ் குமார் சொதப்பி இருக்கிறார். அவர் 22 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். மறுபுறம், பேட்ஸ்மேனாகக் கருதப்படாத ஷர்துல் தாக்கூர் 34 பந்துகளில் 27 ரன்களைச் சேர்த்திருக்கிறார்.
அடுத்து இரண்டாம் நாள் பந்துவீச்சின்போது ஷர்துல் தாக்கூர் விக்கெட் வீழ்த்தாதபோதும், 10 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். மறுபுறம், நிதீஷ் குமார் ரெட்டி 3 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து அதிர்ச்சி அளித்திருந்தார். இதை அடுத்து நிதீஷ் குமார் ரெட்டி ஃபார்ம் இழந்துவிட்டதாக விமர்சனம் இருந்துள்ளது.
அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலும் சரியாக ரன் குவிக்கவில்லை, அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி இருக்கிறார். இதை அடுத்து நிதீஷ் குமார் ரெட்டிக்கு இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதே சமயம், இதற்கு முன்பே இந்திய டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டராக பல போட்டிகளில் விளையாடி உள்ள ஷர்துல் தாக்குர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.