சரித்திரம் படைத்த ரோஹித் சர்மா.. உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மெகா டெஸ்ட் சாதனை
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா பெரிய அளவில் பெயர் எடுக்கவில்லை என்றாலும் இந்த சாதனையால் அந்த குறையை போக்கி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா சதம் அடித்து இருந்தார். இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்த போது ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்து தனது 11வது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.

ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து இருந்தார். ரோஹித் அடித்த சதம் காரணமாக போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. இந்தப் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம், ரோஹித் சர்மா எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத ஒரு சாதனையை புதிதாக செய்து இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10க்கும் மேற்பட்ட சதம் அடித்து, அந்த போட்டிகளில் எல்லாம் வெற்றியும் பெற்ற ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. அவர் இதுவரை 11 சதம் அடித்து இருக்கும் நிலையில், அந்தப் போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
குறைந்தபட்சம் ஐந்துக்கும் மேற்பட்ட சதம் அடித்து, அந்தப் போட்டிகளில் எல்லாம் வெற்றிகளை பெற்றுள்ள வீரர்களில் ரோஹித் சர்மாவை தவிர்த்து நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். ட்ராவிஸ் ஹெட் (7 சதம்), வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் (6 சதம்), டேரன் லேமன் (5 சதம்), ஒல்லி போப் (5 சதம்).
மேலும், வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (20 சதம்), ராகுல் டிராவிட் (15 சதம்), விராட் கோலி (13 சதம்), புஜாரா (13 சதம்), ரோஹித் சர்மா (11 சதம்) உள்ளனர்.


Click it and Unblock the Notifications