“இப்படியே பண்ணிட்டு இருந்தா..” ஜெய்ஸ்வாலை “தனியாக கவனித்த” கம்பீர்.. மோசமான ஃபார்ம்.. எச்சரித்த கோச்
லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் நீண்ட உரையாடலை மேற்கொண்டார். பயிற்சி முகாமின் போது நடைபெற்ற இந்த உரையாடல் இந்திய அணி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த இரண்டு இந்தியா 'ஏ' பயிற்சிப் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதே சமயம், அவரது போட்டியாளர்களான அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சிறப்பாக ரன் குவித்து தங்கள் திறமையை நிரூபித்திருந்தனர். இந்த நிலையில்தான், கெளதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் சற்று கடுமையாகவே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு இன்னிங்ஸ்களில் முறையே 24, 64, 17 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒரு அரை சதம் அடித்தாலும், மற்ற மூன்று இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதே சமயம், அபிமன்யு ஈஸ்வரன் இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தினார். கே.எல். ராகுல், தான் விளையாடிய ஒரே ஒரு பயிற்சிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஒரு சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அரை சதமும் அடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த மூவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் மூன்று வரிசைகளில் பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போது இந்திய அணியில் பல புதிய வீரர்களும் இடம் பெற்றிருப்பதால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், அணியில் அவரது இடத்தை இழக்கவும் நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. இந்த அழுத்தமான சூழ்நிலை குறித்துதான் கெளதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் பேசியிருப்பார் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்த பயிற்சியின் நிகழ்வின் போது, கெளதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் இரண்டு முறை பேசினார். இரண்டு முறையும் அந்த உரையாடல் நீண்டதாக சென்றது. தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன்களில் நல்ல ஃபார்மில் இருப்பது யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். அவர் கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக இருந்தார். அதே ஃபார்மை இந்த ஆண்டும் அவர் தொடர வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications