ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் இடையே தீவிர விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்தின் உள்ளே நுழைந்தார். பாதுகாவலர்களை மீறி உள்ளே வந்த அவர் ரோஹித் சர்மா விடம் ஏதோ பேசினார். பின் திடீரென அவர் காலில் விழுந்தார். அதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. கோலி ரசிகராக இருக்கும் ஒருவர் அத்துமீறி ரோஹித் சர்மாவை ஏன் பார்க்க வேண்டும், என்ற சந்தேகத்தால் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டது.
பொதுவாக தங்களின் தீவிர கிரிக்கெட் ஹீரோவை பார்க்கத் தான் இது போல அபாயமான முறையில் பாதுகாவலர்களை மீறி ரசிகர்கள் மைதானத்தின் உள்ளே நுழைவார்கள். ஆனால், இங்கே விராட் கோலியின் தீவிர ரசிகர், கோலி இந்தப் போட்டியில் ஆடாத நிலையில், இந்திய அணியில் அவருக்கு இணையான மூத்த வீரரான கேப்டன் ரோஹித் சர்மா காலில் விழுந்து வணங்கினார். நல்லவேளையாக வேறு எந்த சர்ச்சையான சம்பவங்களும் அங்கே நடக்கவில்லை. பின்னர் பாதுகாவலர் அந்த ரசிகரை கழுத்தை பிடித்து அழைத்து சென்றார்.

விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்று இருந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி துவங்க மூன்று நாட்கள் இருந்த நிலையில் தனிப்பட்ட காரணத்தால் தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது முடிவை மதித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவரை விடுவித்தது.
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது அபூர்வம் தான். இந்த நிலையில், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் குவித்தது. "பேஸ்பால்" (Bazball) என்ற அதிரடி ஆட்டம் ஆடும் பாணியில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய சுழற் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்களை இழந்து 246 ரன்களை எட்டியது.
அடுத்து இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் அளித்தனர் அப்போது தான் அந்த விராட் கோலி ரசிகர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். பின்னர் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 70 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இருந்தார். இந்தியா 23 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.