IND vs ENG : தினேஷ் கார்த்திக்கை ஆலோசகராக நியமித்த இங்கிலாந்து அணி.. ரசிகர்கள் சரமாரி விளாசல்
மும்பை : இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தற்காலிகமான ஒப்பந்தம் தான் என்றாலும் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கு முன் தங்களது இரண்டாம் கட்ட அணியான இங்கிலாந்து லயன்ஸ் அணியை பயிற்சிப் போட்டிகளில் ஆட அனுப்பி உள்ளது. அந்த அணியுடன் இந்தியா ஏ அணி மோத உள்ளது. ஜனவரி 12 அன்று இரண்டு நாள் பயிற்சிப் போட்டியும், ஜனவரி 17 அன்று நான்கு நாள் முதல் தர டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது.

ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவை சேர்ந்த இயான் பெல் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோர் ஜனவரி 18 அன்று தான் இந்தியா வர உள்ளனர். அதுவரை இங்கிலாந்து லயன்ஸ் அணியை வழிநடத்த ஒருவர் தேவை என்பதால் இந்திய ஆடுகளங்கள் மற்றும் சூழ்நிலை குறித்து அணியை தயார் செய்யும் வகையில் தினேஷ் கார்த்திக்கை 9 நாட்களுக்கு மட்டும் பேட்டிங் ஆலோசகராக நியமித்து இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு.
அவர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ரகசியங்களை சொல்ல வாய்ப்பு உள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இங்கிலாந்து லயன்ஸ் அணியில், டெஸ்ட் தொடரில் ஆடப் போகும் வீரர்கள் யாரும் இல்லை என்றாலும் கூட இந்திய ஆடுகளங்கள், இந்திய வீரர்களின் பலம், பலவீனம் குறித்த ரகசியங்களை தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து இங்கிலாந்து அணி கேட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், தினேஷ் கார்த்திக் இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்காத நிலையில் அவர் எப்படி மற்றொரு நாட்டின் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம், தினேஷ் கார்த்திக் பயிற்சியாளராக அடுத்த இன்னிங்க்ஸ்-ஐ துவக்கி இருப்பதாக சிலர் அவருக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications