லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்தப் போட்டிகளின் போது பிளேயிங் லெவனில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் எனப் பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரின் போது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களே இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. இதுவரை நடந்த கிரிக்கெட் தொடர்களும் அதைப் போன்று இருந்துள்ளது.
எனினும், இந்த சமயம் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் போது, இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் உருவாக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இங்கிலாந்து அணியில் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த அணி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை ஆதரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அதை சாதகமாக பயன்படுத்தும் வகையில் சுழற்பந்துவீச்சுக்கும் வேகப்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் வகையிலான ஆடுகளங்கள் தயார் செய்யக்கூடும்.

எனவே, இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவை மட்டும் நம்பி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட கூடாது எனப் பலரும் கூறி வருகின்றனர். ரவீந்திர ஜடேஜா தனித்துவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் எனச் சொல்ல முடியாது. அவர் பந்தை சுழல வைப்பதை விட, பந்து வீசப்படும் கோணத்தை வைத்து தாக்கத்தை ஏற்படுத்துவார்.
ஆனால், அவர் ஒருவரை மட்டுமே நம்பி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட முடியாது எனப் பலரும் கூறி வருகின்றனர் என்பதால், நிச்சயம் பந்தை சுழல வைக்கும் ஆற்றல் உடைய ஒரு சுழற்பந்துவீச்சாளரை சேர்க்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே, குல்தீப் யாதவை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், "இந்திய அணி குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஜடேஜாவும் நிச்சயமாக அவருடன் பந்து வீசுவார். எனவே, இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது முதல் போட்டிக்குச் சரியாக இருக்கும். அதே சமயம், ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்க்கலாம். ஆனால் அப்படி இல்லை என்றாலும், இந்த இருவரும் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் ஆற்றல் உடையவர்கள்" என்றார் ஹர்பஜன் சிங்.