பிராட்மேனுக்கு நிகரான பேட்டிங் ஆவரேஜ்.. தூக்கி எறிந்த பிசிசிஐ.. இளம் இந்திய வீரருக்கு நேர்ந்த கதி
மும்பை : ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் தான் கிரிக்கெட்டில் மிக அதிக பேட்டிங் சராசரி கொண்டவர். அவரது முதல் தர டெஸ்ட் பேட்டிங் சராசரி 95.14 ஆகும். அதற்கு அடுத்து அதே முதல் தர டெஸ்டில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரராக கடந்த ஆண்டு வரை இருந்தவர் மும்பையின் உள்ளூர் வீரரான சர்பராஸ் கான்.
சர்பராஸ் கானின் பேட்டிங் சராசரி கடந்த ஆண்டு ரஞ்சி ட்ராபி தொடரின் முடிவில் 79.65 ஆக இருந்தது. ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் முதல் தர கிரிக்கெட் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் சர்பராஸ் கான். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ரஞ்சி தொடரிலும் ரன் மெஷினாக ரன் குவித்து தள்ளி இருக்கிறார்.

ஆனால், அவருக்கு இதுவரை இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்வுக் குழுவினர் மாறினாலும் கூட சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது மும்பை மாநிலத்தை சேர்ந்த அஜித் அகர்கர் தான் தேர்வுக் குழு தலைவராக இருக்கிறார். மும்பை மாநிலத்தை சேர்ந்த ரோஹித் சர்மா தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார்.
இவர்கள் இருவரும் நினைத்தால் கூட சர்பராஸ் கான் மாற்று வீரராகவாவது இந்நேரம் இந்திய டெஸ்ட் அணியில் இருந்திருப்பார். ஆனால், அவரை ஏதோ ஒரு காரணத்தால் பிசிசிஐ ஒதுக்கி வைத்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேட்டால், சர்பராஸ் கான் உடல் பருமனாக உள்ளது. அதனால், சர்வதேச அளவில் விளையாட போதுமான உடற்தகுதி அவரிடம் இல்லை. அவரால் நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்ய முடியாது என சப்பைக்கட்டு கட்டி வருகிறார்கள் பிசிசிஐ அதிகாரிகள்.
மேலும், சர்பராஸ் கான் களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். சதம் அடித்தால் சைகை செய்து கொண்டாடுகிறார் என்கிறார்கள். இதெல்லாம் விராட் கோலி, கே எல் ராகுல் எல்லாம் செய்யாத சைகையா? காட்டாத ஆக்ரோஷமா? இதுதான் பிரச்சனை என்றால் இதை தேர்வுக் குழுவே அவரிடம் நேரடியாக சொல்லலாம். அதை மாற்றிக் கொண்டால் அணியில் இடம் கிடைக்கும் என்றால் எந்த வீரராவது அதை மாற்றிக் கொள்ளாமல் இருப்பார்களா? ஆனால், பிசிசிஐ ஏதோ ஒரு காரணம் சொல்லி அவரை தவிர்த்து வருகிறது.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் இந்தியா ஏ அணியில் பங்கேற்று சர்பராஸ் கான் ரன் குவித்து இருந்தார். அடுத்து தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரிலும் அவர் ரன் குவித்து வருகிறார். ஆனாலும், அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் மாற்று வீரராக கூட இடம் அளிக்கப்படவில்லை. என்றாவது பிசிசிஐ அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
Story first published: Tuesday, January 16, 2024, 20:33 [IST]
Other articles published on Jan 16, 2024


Click it and Unblock the Notifications